Saturday, July 11, 2009

சாபம் பெற்ற மலர்...




நம்மை நம்முள்
புதைத்துக்கொண்ட இரவுகள்
இனி வராமல் போகலாம் ..

உன்னால் நிரப்பப்பட்ட
என் உயிர் கோப்பை
ஒரு நாள் உடைபட்டு
என் உதிரத்தின் மணம்
உன் நினைவுகளில்
உலா வரலாம் ....
தளர்ந்து விடாதே ...

வரவேற்பறையில்
வாடிய மலரின் அலங்காரமா ?...
வேண்டவே வேண்டாம் ...
நேற்றைய தினங்களின்
நாட்காட்டி தாள்களாய்....
கிழித்தெறி என் கவிதைகளை ...

எவைகளின் பார்வைக்காய்
ஏங்கி எழுதுகிறேனோ
அவைகளை மூடிக்கொள் ..
திறக்கவே வேண்டாம் ...
என் கவிதைகளுக்காய்
உன் விழிகளை குருடாக்கி விடு ....

இருவரும்
பார்த்திருந்த நாட்களில்
இதயங்களைதானே
தொலைத்துகொண்டோம் ..
உன் நினைவுகளோடு
ஒரு ஜென்மத்தை கடந்துவிட்டேன் ..

பூக்கின்ற
மலர்கள் எல்லாம்
பூஜைக்கு மட்டுமா ???
இல்லை ...இல்லை
சவமஞ்சத்தை  அலங்கரி என
சாபம் பெற்று வந்த
மலர்களும் இல்லையா ...???...


Monday, November 24, 2008

பிரிவும் ஒரு காதல் தான் !!!...






பிரிவும்  ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் ஆசைகளை
பிரிந்தபோது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் விழிகள்
உறக்கத்தை பிரிந்தபோது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் உறவுகளை
நான் பிரிந்த போது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
எனக்கான
என் வாழ்வை
நான் மறந்த போது ...

பிரிவுகளின் அர்த்தத்தை
உணரவைத்து பிரிந்தவளே ..
காதலிக்க தொடங்கிவிட்டேன் ..
காதலாக உன் பிரிவை கூட !!!...

Saturday, November 22, 2008

கனவுப்பறவை...






இதயத்துள்
புள்ளிகளில் தொடங்கி
வட்டமிட்டு வட்டமிட்டு
நாடி நரம்புகளை
அடக்க துடித்திருந்த
கனவுகளை ....

சிலுவையில் அறைந்து
சிறை படுத்திய திருப்தியில்
சிறகுகளை
முறித்துக்கொண்டு
திரும்ப நடக்கிறேன் ...

கடந்து வந்த சுவடுகளே
கை பிடித்திழுக்க
முளைக்க தொடங்கின ...
மீண்டும் சிறகுகள் ....

Friday, November 21, 2008

கடந்த வாலிபம் ...

அதி பிரமாண்டமாய்
சிறகடித்து
வான்தொட்டும் ...
திரும்பும்வழி தெரியாமல்
விலகி போன
வெள்ளாடாய் மனம் ...

பிரதிபலித்த
பிம்பங்கள்
அழுத்தி அழுத்தியே
உடைந்து விட்ட
நிலைக்கண்ணாடி ...

வழி நெடுக
கசிந்து கொண்டு இருக்கிறது ...
கீறிய ரணங்களின்
வேர்வைகள் ...
தொடர்ந்து
துடைத்திருந்தும்
வழிந்த வண்ணமாய்
கடந்திருக்கிறது
வாலிபம் ....

Saturday, October 11, 2008

கனவொன்று நேற்றும் ...



அர்த்த
ஜாமத்தில்
அடிக்கடி வரும்
கனவொன்று
நேற்றும் ...

இருண்ட அறை ..
என்னால்
இயன்றது
இத்தனையே என
இருட்டை
விரட்டிக்கொண்டு
ஓரத்தில் சிறு விளக்கு ...

அவ்வப்போது
தேங்கல்களாய்
சில முனங்கல்கள் ..
மெல்ல பதட்டத்தோடு
நெருங்குகிறேன் ..

மூலையில்
முகம் புதைத்து
நெஞ்சில் உள்ளதை
சொல்லத்தெரியாமல்
அழும் சிறு குழந்தை ..

ஆறுதலாய்
அரவணைக்க
அன்பாய் தொட்டு
மூடி இருந்த
பிஞ்சு கைகளை ..
விலக்குகிறேன் ..

ஐயோ !!!...
என் முகம் ..

சிறு வயதில்
அறியாமல்
அனாதையாய்
நான் தொலைத்த
அன்றைய என்முகம் ...